வெளிமாவட்டங்களுக்கான பிரதான போக்குவரத்து மற்றும் உள்ளூர் போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
படுவான்கரையிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதியுடனான தொடர்புகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலத்தில் மாவட்டத்தில் 84.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றுக் காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலத்தில் 272.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கடந்த முதலாம் திகதியிலிருந்து நேற்றுக் காலை 8.30 மணிவரை 1685.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 33,149 குடும்பத்தைச் சேர்ந்த 1 இலட்சத்து 24 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 13,148 குடும்பங்களைச் சேர்ந்த 47,057 பேர் 105 நலன்புரி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன், 20,001 குடும்பங்களைச் சேர்ந்த 76,931 பேர் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களுக்கு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் உத்தரவின் பேரில் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை வரையான தகவலின்படியே மேற்படி இடம்பெயர்வு பதிவாகியுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வேகமாக நீர்பெருக்கெடுத்ததால் உயர்வான பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகர் உட்பட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல கிராமங்களில் இருந்து மக்கள் இயந்திரப் படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். மீட்கப்பட்ட மக்கள் பாடசாலைகளிலும் பொது கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்கள், கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இயந்திரப் படகு மூலம் மீட்புப் பணிகளை நேற்று முன்தினம் மாலைவரை மேற்கொண்டனர். சமைத்த உணவினை வழங்குவதற்கான பணியும் படகுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் மாலை வரை நீர்பெருகிய வேகத்தில் தொடர்ந்து நீர் பரவுமாக இருந்தால் சில பகுதிகள் தவிர அனைத்துப் பகுதியும் நீரில் மூழ்கும் அபாயமும் மக்களைப் பாதுகாப்பதில் சிரமமும் ஏற்படும்.
வெள்ளம் காரணமாக மட்டக்களப்புகொழும்பு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புகையிரதச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
படுவான்கரைக்கான போக்குவரத்துப் பாதைகளை வலையிறவு பாலவீதி, பட்டிருப்பு பாலவீதி, புலிபாய்ந்தகல்பால வீதி, செங்கலடி கறுத்தப்பால வீதி என்பன நீரில் மூழ்கியதுடன், கிராமங்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலைகள் இயங்கவில்லை.
வாகரைப் பிரதேசத்தில் பனிச்சங்கேணி பாலம், கட்டுமுறிவு, வெருகல் போன்ற கிராமங்களுடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்த சில நெல் வயல்கள் தற்போது அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த போதும் அவை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், அறுவடை செய்த நிலையில் உள்ள உப்பட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
குளங்கள் உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் குளங்கள் உடைப்பெடுக்கக் கூடிய சாத்தியம் இல்லை என அந்தந்த குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளதுடன், உடைப்பெடுக்காமல் பாதுகாக்கவே மேலதிக நீரை திறந்துவிட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்ட போதும் படுவன்ங்கரையில் உள்ள வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, செங்கலடி, கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளே மிகவும் மோசமாக நீரில் மூழ்கியுள்ளது.
No comments:
Post a Comment