
நலன்புரி நிலையங்களிலுள்ள குடும்பங்கள்: 5,074 (17,503 நபர்கள்)
உறவினர் – நண்பர் வீடுகளிலுள்ள குடும்பங்கள்: 7,077 (30,222 நபர்கள்)
மொத்தம்: 12,151 குடும்பங்கள் – 47,725 நபர்கள்
மழை வீழ்ச்சி: 01.01.2011 முதல் 03.02.2011 காலை 8:30 வரை: 1600.9 mm
(ஆண்டுச் சராசரி மழை வீழ்ச்சி: 1800 mm)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் இரண்டாவது தடவையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி மாத முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் முற்றாக வடிவதற்கு முன்னர் மீண்டும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்வு ஸ்தம்பித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மழையிலும் குளிரிலும் நலன்புரி நிலையங்களிலும் காலத்தை கழிக்க வேண்டிய அவல நிலைக்கு உட்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணித்தியாலத்துள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 253.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு காலநிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஏ.எம்.எம். சாலிதீன் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் நேற்று காலை 8.30 மணிவரை 1600.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1651 மில்லி மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது. மழை தொடர்ந்து பெய்த வண்ணமுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் கரைக்கு மேலால் வெள்ளம் பாய்கிறது. வாவி கரையிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முறுத்தானை ஆறு அண்டல் ஓயா சில்லிக்கொடி ஆறு, மூங்கில் ஆறு, கிறட்டினை ஆறு, நாதனை ஆறு, வாழைச்சேனை ஆறு, பனிச்சங்கேணி ஆறு என்பன கரைபுரண்டு ஓடுகின்றன. கிறட்டினை ஆற்று கறுத்தப்பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவை நேற்று காலை நடைபெறவில்லை. மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் மன்னம்பிட்டியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கான வாகனப் போக்குவரத்து நடைபெறவில்லை. மட்டு திருமலை வீதியில் பிள்ளையாரடியிலும் வெள்ளம் பாய்கிறது.
காரைதீவு - அம்பாறை வீதியிலும் மாவடிப்பள்ளி, வளத்தாப்பிட்டி ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மண்டூர் - வெல்லாவெளி வீதி, பட்டிருப்பு - வெல்லாவெளி வீதி, வெல்லாவெளி - பாலையடிவட்டை விதி, வலையறவு - வவுனதீவு வீதி, வவுனதீவு - மண்டபத்தடி வீதி, வவுனதீவு - குறிஞ்சாமுனை வீதி ஆகியனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இவ்வீதிகளினூடாக வானகப் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்துள்ளன.
மண்முனை துறை இயந்திரப் படகுச் சேவையும் நேற்று நடைபெறவில்லை. மட்டக்களப்பு வாவியில் மண்டூர், அம்பலாந்துறை ஆகிய இரண்டு ஓடத்துறைகளினூடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. மண்டூர் ஓடத்துறை படகின் அடியில் ஓட்டை ஏற்பட்டுள்ளதினால் படகு பயணிகளுடன் வாவியில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளருடன் தொடர்பு கொண்டு மாற்று படகு வசதியை ஏற்படுத்துமாறு கேட்டுள்ளார்.
17 வருடங்களின் பின்னர் சேனநாயக்க சமுத்திரத்தின் 6 கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 110 அடி உயரமுடைய இக்குளத்தில் நீர் நிரம்பி வழிவதன் காரணமாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அத்துடன், உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், வாகனேரி ஆகிய பாரிய நீர்ப்பாசன குளங்களும் நிரம்பி வழிவதால் அவற்றின் கதவுகளும் தொடர்ந்து திறந்து விடப்பட்டு பூரண கட்டுப்பாட்டினுள் வைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ் மோகனராஜா தெரிவித்தார்.
மழை வெள்ளம் காரணமாக கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரி மற்றும் வந்தாறுமூலை வளாகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இசை நடனக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் கலாநிதி கே. பிரேமகுமார் தெரிவித்தார்.
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாதனவெளி வேத்துச் சேனை, ஆனை கட்டியவளி, ராணமடு போன்ற கிராமங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பண்டாரியா வெளி, படையான்டவெளி கிராமத்து மக்களும் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 7 நாட்களுக்கு போதுமான உலர் உணவு வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிப்புரை மட்டக்களப்பு அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் ஏற்கனவே 4 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப் பட்டன. இதனை வழங்காதவர்களுக்கே தற்போது 7 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப்படவுள்ளது.கூ
கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெள்ள நிலையினை கவனத்திற் கொண்டு 3 மாவட்டங்களுக்கு விஷேட வைத்திய குழுக்கள் மூன்றினை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சார் எம்.எஸ்.சுபைர் தெரிவிக்கின்றார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தால் தொற்று நோய்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உடனடி நடவடிக்கையெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுபைர் தெரிவித்தார்
கர்ப்பிணித் தாய்மார்களின் நலனில் அதிக கவனம் செலுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ள அமைச்சர், அவர்களுக்கான தேவைகளை எவ்வித தடைகளுமின்றி பெற்றுக் கொடுக்க நடவடிக்கையயெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அருகில் அம்பியுலன்ஸ் வண்டிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அமைச்சர் சுபைர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பதாக தெரிவித்த மாகாண அமைச்சர் சுபைர், வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் மக்களுக்கான உயர்ந்த பணியினை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment