சேருவிலவின் சிற்றாறு என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தோரை மீட்பதற்குச் சென்ற படகு மூழ்கியதிலேயே இரு குழந்தைகள்,பெண் ஒருவர், கடற்படை வீரர் உள்ளிட்ட ஐவர் காணாமல் போயுள்ளனர்.
உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 3 இராணுவத்தினர், 4 கடற்படையினர் ஆகியோர் அப்படகில் சென்று 16 பேரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின்போதே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கடற்படையினர் ஏனையோரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலைகண்டி வீதியில் தம்பலகமம் அருகில் கல்மெட்டியாவ குளம் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய வங்கி சிற்×ழியர் ஒருவர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோகா பியதாஸ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 60 ஆயிரம் பேர் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 159 நலன்புரி நிலையங்களில் 15669 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 198 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் மாவட்டம் முழுவதுமாக 80 ஆயிரத்து 952 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ. நடராசா தெரிவித்தார்.
நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மூன்று நாள் சமைத்த உணவும் ஒருவார கால உலர் உணவு நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் ஒருவார கால உலர் உணவு நிவாரணம் வழங்கப்படுவதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அமைச்சு பிறப்பித்திருப்பதாகவும் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மகா விளாங்குளத்தின் அணைக்கட்டு வெட்டப்பட்டு மேலதிக நீர்வெளியேறவிடப்பட்டது.
அதனையடுத்து அப்பிரதேசம் வெள்ளக்காடாகியது. குளம் உடைத்துவிடும் என்ற அச்சத்தினாலேயே அணைக்கட்டின் ஒரு பகுதி வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment