Sunday, 6 February 2011

 

பாதிக்கப்பட்டோர் தொகை 13 இலட்சம்; 11,000 வீடுகள் சேதம்; 700 முகாம்கள்



4 மாவட்டங்களில் அபாயம்; 24 மணிநேர முன்னெச்சரிக்கை


திருமலை மாவட்டம்: முள்ளிப்பொத்தானை, இறக்கக்கண்டியில் 3 சடலங்கள் மீட்பு

நிலம் அமிழ்வதால் இரத்தோட்டையில் பரபரப்பு
பாதிக்கப்பட்டோர் தொகை 13 இலட்சம்; 11,000 வீடுகள் சேதம்; 700 முகாம்கள்
கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம்

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9664 வீடுகள் பகுதியளவில் சேதமடைந் திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாண கூறினார்.

இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாகவே தற்போதைய மழைக் காலநிலை தொடருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய மழைகால நிலையின் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. மீனவர்கள் முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் முதல் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கிய போதிலும் இலங்கைக்கு அருகில் திரும்பவும் அமுக்க நிலை உருவாகி இருப்பதால் மழைக் காலநிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் குறிப்பிடுகையில், தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 முகாம்களில் தங்கியுள்ளனர்.

ம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6558 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6247 குடும்பங் களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6513 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடமத்திய கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.

இம் மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்வும் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

Saturday, 5 February 2011

தாண்டு கொண்டிருக்கும் கிழக்கிலங்கை..

05 February 2011



ஆட வைத்திருக்கும் ஓடும் வெள்ளத்தில் பாடுமீன் வாவி பரவி பரிதவிக்கும் மக்கள் லெட்சோப லெட்சம். இரண்டாம் தடவையும் பெய்து வரும் அடைமழையில் மாவட்டச் செயலாளர் அறிக்கைப்படி 58,000 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 177 நலன்புரி முகாங்களில் 21,000 குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. குறிப்பாக கோடைமேடு, சித்தாண்டி, செங்கலடி, தன்னாமுனை, கல்லாறு, ஏறாவூர், வாகரை, பிள்ளையாரடி போன்ற எழுவான்கரைப்பிரதேசங்கள் மற்றும் படுவான்கரைப் பிரதேசத்தின் அனைத்துப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை கடற்ப்படையின் உதவியுடன் இவர்களுக்கான படகு சேவை நடைபெற்று வருவதுடன், பொதுமக்களின் தோணிகள் மூலமான சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றது.


                             (தடைப்பட்ட பாதையில் உழவு இயந்திரத்தில் வரும் மக்கள்)
இவைதவிர நான் சித்தாண்டி பக்கம் 03.02.2011 அன்று செய்தி சேகரிக்க சென்றபோது இந்தப்பக்கம் பிரயாணம் செய்ய முடியாமல் கிழக்குப் பல்கலைக்கழகத்தினில் இருந்து நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. அங்கு அநேகமான மக்கள் நடையிலும், உழவு இயந்நிரங்களிலும், வகை தொகையில்லாமல் வந்திறங்கினர். அவர்களில் குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என பலர் மிகவும் சிரமப்பட்டு வருவதை காணும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இவர்கள் அநேகமாக தீவுப் பகுதி, வந்தாறுமூலை வடக்கு, மற்றும் மேற்கு அதேபோல் கொம்மாதுறை மேற்கு மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து வருகை தந்தனர். 03.02.2011 அன்று இரவு வரைக்குமான கணக்கெடுப்பின்படி சுமார் 211 குடும்பம் தற்க்காலிகமாக தஞ்சம் புகுந்திருந்தனர். அநேகமான மக்கள் நாளாந்தம் கூலிவேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களாகவே இருந்தனர். இவர்கள் குறித்த நேரம் வரைக்கும் அநாதரவாகவே விடப்பட்டிருந்தனர்.

                                                     (மூழ்கிகொண்டிருக்கும் கிழக்குப் பல்கலைக்களகம்)
இருப்பினும் கி.ப.கழகத்தின் சமுகவியல் துறையில் மூத்த விரிவுரையாளரும், சமூக சேவகருமான தில்லைநாதன் அவர்களின் பரோபகார சிந்தையில் இந்த பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உடனடி உணவு உறைவிட வசதிகள் அங்கு கடமைபுரியும் சக ஊழியர்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டமையை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்துடன் இன்னும் உதவக்கூடிய பெரியவர்களிடமும் உதவிகள் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களும் சிறியளவில் கொடுத்து உதவியதுடன். பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்களும் அம்மக்களின் அவல நிலையை பார்த்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                       (கி.ப.கழகத்துள் நுழையும் இடம் பெயுர்ந்த மக்கள்)
இம்மக்கள் போன்று மாவட்டம் பூராகவும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிலமையும் மிக மோசமாகவே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. சுமார் நான்கு அடி அளவில் வெள்ளம் வேகமாக பரவி ஓடுவதனை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அநேகமான சொத்துக்கள் சிதைவடைந்துள்ளது. குறிப்பாக அவர்களது விவசாயப்பண்ணைகள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி இருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. அது போன்று இன்னும் நிறைய இழப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கிடையில் இங்கு மாணவர்கள் அனைவரும் வீடு சென்றுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கற்பித்தல் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
           (ஓடும் வெள்ளத்தில் ஆடும் கலை கலாசார பீடம்)
ஆகவே திரும்ப திரும்ப அடிக்கும் வெள்ளம் மக்களை அடியோடு குன்றவைத்துள்ளது. அவர்களது வாழ்வாதாரம், வாழ்விடம், கல்வி, வீடுகள் என அனைத்தையும் அழித்துள்ளது. சுனாமி அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இது பன்மடங்கு அழிவினை மக்களுக்கு ஏற்ப்படுத்தியுள்ளது
thanks vellisaram

மட்டு.மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் படுவான்கரையுடன் தொடர்பு முற்றாகத் துண்டிப்பு குளங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக அங்குள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெளிமாவட்டங்களுக்கான பிரதான போக்குவரத்து மற்றும் உள்ளூர் போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
படுவான்கரையிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதியுடனான தொடர்புகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலத்தில் மாவட்டத்தில் 84.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றுக் காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலத்தில் 272.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கடந்த முதலாம் திகதியிலிருந்து நேற்றுக் காலை 8.30 மணிவரை 1685.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 33,149 குடும்பத்தைச் சேர்ந்த 1 இலட்சத்து 24 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 13,148 குடும்பங்களைச் சேர்ந்த 47,057 பேர் 105 நலன்புரி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன், 20,001 குடும்பங்களைச் சேர்ந்த 76,931 பேர் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களுக்கு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் உத்தரவின் பேரில் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை வரையான தகவலின்படியே மேற்படி இடம்பெயர்வு பதிவாகியுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வேகமாக நீர்பெருக்கெடுத்ததால் உயர்வான பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகர் உட்பட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல கிராமங்களில் இருந்து மக்கள் இயந்திரப் படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். மீட்கப்பட்ட மக்கள் பாடசாலைகளிலும் பொது கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்கள், கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இயந்திரப் படகு மூலம் மீட்புப் பணிகளை நேற்று முன்தினம் மாலைவரை மேற்கொண்டனர். சமைத்த உணவினை வழங்குவதற்கான பணியும் படகுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் மாலை வரை நீர்பெருகிய வேகத்தில் தொடர்ந்து நீர் பரவுமாக இருந்தால் சில பகுதிகள் தவிர அனைத்துப் பகுதியும் நீரில் மூழ்கும் அபாயமும் மக்களைப் பாதுகாப்பதில் சிரமமும் ஏற்படும்.
வெள்ளம் காரணமாக மட்டக்களப்புகொழும்பு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புகையிரதச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
படுவான்கரைக்கான போக்குவரத்துப் பாதைகளை வலையிறவு பாலவீதி, பட்டிருப்பு பாலவீதி, புலிபாய்ந்தகல்பால வீதி, செங்கலடி கறுத்தப்பால வீதி என்பன நீரில் மூழ்கியதுடன், கிராமங்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலைகள் இயங்கவில்லை.
வாகரைப் பிரதேசத்தில் பனிச்சங்கேணி பாலம், கட்டுமுறிவு, வெருகல் போன்ற கிராமங்களுடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்த சில நெல் வயல்கள் தற்போது அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த போதும் அவை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், அறுவடை செய்த நிலையில் உள்ள உப்பட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
குளங்கள் உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் குளங்கள் உடைப்பெடுக்கக் கூடிய சாத்தியம் இல்லை என அந்தந்த குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளதுடன், உடைப்பெடுக்காமல் பாதுகாக்கவே மேலதிக நீரை திறந்துவிட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்ட போதும் படுவன்ங்கரையில் உள்ள வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, செங்கலடி, கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளே மிகவும் மோசமாக நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ள அகதிகளை மீ“ட்கச் சென்ற படகு மூழ்கி இரு குழந்தைகள் உட்பட ஐவரை காணவில்லை திருமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிப்பு


திருகோணமலையில் வெள்ளத்தினால் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சேருவில பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 பேரைக் காப்பாற்றச் சென்ற படகு வெள்ளத்தில் மூழ்கியதில் இரு குழந்தை உட்பட ஐவர் காணாமல் போயுள்ளனர்.
சேருவிலவின் சிற்றாறு என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தோரை மீட்பதற்குச் சென்ற படகு மூழ்கியதிலேயே இரு குழந்தைகள்,பெண் ஒருவர், கடற்படை வீரர் உள்ளிட்ட ஐவர் காணாமல் போயுள்ளனர்.
உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 3 இராணுவத்தினர், 4 கடற்படையினர் ஆகியோர் அப்படகில் சென்று 16 பேரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின்போதே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கடற்படையினர் ஏனையோரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலைகண்டி வீதியில் தம்பலகமம் அருகில் கல்மெட்டியாவ குளம் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய வங்கி சிற்×ழியர் ஒருவர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோகா பியதாஸ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 60 ஆயிரம் பேர் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 159 நலன்புரி நிலையங்களில் 15669 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 198 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் மாவட்டம் முழுவதுமாக 80 ஆயிரத்து 952 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ. நடராசா தெரிவித்தார்.
நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மூன்று நாள் சமைத்த உணவும் ஒருவார கால உலர் உணவு நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் ஒருவார கால உலர் உணவு நிவாரணம் வழங்கப்படுவதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அமைச்சு பிறப்பித்திருப்பதாகவும் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மகா விளாங்குளத்தின் அணைக்கட்டு வெட்டப்பட்டு மேலதிக நீர்வெளியேறவிடப்பட்டது.
அதனையடுத்து அப்பிரதேசம் வெள்ளக்காடாகியது. குளம் உடைத்துவிடும் என்ற அச்சத்தினாலேயே அணைக்கட்டின் ஒரு பகுதி வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது

Friday, 4 February 2011

துண்டிக்கப்பட்ட வெல்லாவளி


துண்டிக்கப்பட்ட வெல்லாவளி

தற்போது ஏற்பட்டுள்ள அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பின் தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று (வெல்லாவளி) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் முற்றாக தரைவழிப்பாதை தொடர்பறுந்த நிலையில் வள்ளங்களினூடான தொடர்புகளுடன் இருக்கிறார்கள்.

இப்பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு பெற்ற தகவல்களின் அடிப்படையில் 04-02-2011 பிற்பகல் 6 மணிவரை இதுவரை 1128 குடும்பங்களைச் சேர்ந்த 4275 மக்கள் இடம்பெயர்ந்து 18 நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 1592 சிறுவர்களும் அடங்குவதாகவும் குறிப்பிட்டார். வேத்துச்சேனை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, மலைக்கட்டு, இராணமடு, முனைத்தீவு,பழுகாமம், பட்டாபுரம் போன்ற அனேக கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனால் கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அவர்களுக்கு உலர்உணவுகள் மற்றும் படுக்கைவிரிப்புகள்(பாய்), உடுதுணிகள் போன்றன அவசரமாகத் தேவைப்படுகின்றன.
முடிந்தளவு உதவி நல்குபவர்கள் உதவிக்கொள்க. உறவுகளே அனர்த்தத்தின் தாக்கங்கள் அறிவீர்கள். முடிந்தளவு உதவுங்கள்.

இங்கு சென்று பட்டிருப்பு பாலத்தின் நிலமையைக்காட்டும் படங்கள் பார்க்க நன்றி ஹரி



கடந்த மாதம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு.
பட்டிருப்பு பாலத்தின் போக்குவரத்து நிலைமை - 13.01.2011

இதனைவிட இப்பொழுது மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளத

thanks rames













கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு



கல்முனை கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் இருவரைக் காணவில்லை என சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சேனைக்குடியிருப்பிலிருந்து சவளக்கடை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தோணி பலத்த காற்றின் காரணமாக கிட்டங்கி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. அதில் பயணித்த 06 பேரில் நால்வர் (04) தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், ஏனைய இருவரைக் காணவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாவிதன்வெளி மற்றும் அன்னமலைக் கிராமங்களைச் சேர்ந்த சதீஸ், கணேஸ் ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.
கல்முனை நகரையும், நாவிதன்வெளி குடியேற்ற கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக 5 அடிக்கு மேலாக வெள்ளம் கடந்த சில நாட்களாக பாய்ந்து வருவதால் வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப் பட்டுள்ளதையடுத்து, வியாழக்கிழமை தொடக்கம் தோணியினூடாகவே மக்கள் பயணத்தை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச்சம்பவத்தை யடுத்து நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸாருக்கு இவ்வீதியூடாக சகல மார்க்க போக்குவரத்தையும் தடை செய்யுமாறு அறிவித்ததையடுத்து, கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்து வருகின்றனர்.

ஆறரை இலட்சம் பேர் பாதிப்பு 430 முகாம்களில் மக்கள் தஞ்சம்




அடைமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதேநேரம் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மட்ட பூகற்பவியலாளர்கள் குறிப்பிட்டனர்.
தற்போதைய மப்பும், மந்தாரத்து டன் கூடிய மழைக் காலநிலை இன்று (5ம் திகதி) நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக்கூடிய மழை பொலன்னறுவையில் 232.4 மில்லி மீற்றர்கள் பெய்துள்ளது. அத்தோடு திருகோணமலை, அரலகங்வில, கெளடுல்ல, வவுனியா, அநுராதபுரம், போவத்தென்ன, மட்டக்களப்பு, கட்டுகஸ் தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபடுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனத்த மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றில் 40 குளங்களின் வான்கதவுகளும் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார். இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் கிழக்கு, வட மத்திய மாகாணங்கள் அடங்களாக நாட்டிலுள்ள 13 மாவட்டங்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 553 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 42 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாக மூன்று தினங்களில் அறுவர் உயிரிழந்திருப்பதுடன் ஏழுபேர் காணாமல் போயுள்ளனர்.
அதேநேரம் வெள்ளம், மண்சரிவு காரணமாக 37 ஆயிரத்து 675 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 39ஆயிரத்து 391 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 430 முகாம்களில் தங்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

திருமலை மாவட்டம்
வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 405 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 175 பேர் 123 முகாம்களில் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 151 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5074 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 503 பேர் 56 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2107 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 940 பேர் 32 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் 4113 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4042 குடும்பங்கள் 83 முகாம்களில் தங்கியுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு ள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை வெள்ளம் காரணமாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, கேகாலை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களும், மண்சரிவினால் நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வெள்ள நிலை காரணமாக கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பெரும்பாலான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தரைவழி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இவ்விரு மாகாணங்களிலும் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள கர்ப்பிணிகளையும், நோயாளர்களையும் விமானப் படையினர் ஹெலிகொப்டர்களி னதும், கடற் படையினர் படகுகளினதும் உதவியோடு மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டு ள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்கள் கூறினர்.

Thursday, 3 February 2011

மூதூர்க் கிழக்கு

மூதூரில் ஈச்சிலம்பத்தைப் பிரதேச செயலர் பிரிவு மூதூர் பிரதேச செயலர் பிரிவு மற்றும் சேருநுவர பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் படகு மூலமே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் அங்கிருந்து நேற்று பிற்பகல் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
கிராமங்களுக்கு இடையேயான தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
மூதூர்க் கிழக்கு பிரதேசத்தில் உள்ள சகல கிராமங்களும் வெள்ளத்தினால் தரைவழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் துறைமுகத்துவாரம்,முட்டுச்சேனை,ஈச்சிலம்பற்று சந்தி,வட்டவான்,மாவடிச்சேனை,பூநகர் ஆகிய இடங்களுக்கு இடையேயும் படகு மூலமே மக்கள் இடம்பெயர்கின்றனர்

கிழக்கு மாகாணத்தில்வெள்ள அனர்த்தம்

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், பாதிப்புக்குள்ளான மக்கள் தங்கள் குடியிருப்புப் பிரதேசங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மக்களின் நாளாந்கத சுமுக வாழ்க்கை முற்றாக சீர்குலைந்துள்ளது. சகல வாழ்வாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளதால் ஜீவனோபாயத்திற்கு மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உறவினர்களது வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் திரட்டும் பணியிலும் நலன்புரி நிலையங்களின் நடவடிக்கைகளிலும் கிராம சேவகர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் குளங்கள் நிரம்பி வழிவதோடு, பல குளங்களினதும் நீர்த்தேங்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. நெல் வயல்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பிரதான வீதிகள் உட்பட அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. உள்ளக வீதிகளில் நீர் தேங்கி நிற்பதுடன் நீர் வழிந்தோடுவதற்காக வீதிகள் வெட்டப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையான சகல கரையோரப் பிரதேசங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தருகின்றன. அம்பாறையில் சேனநாயக சமுத்திரத்தின் நீர் மட்டம் 107 அடிக்கு மேல் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் கதவுகள் திறக்கப்பட்டதால் காரைதீவு, சம்மாந்துறை, ஒலுவில் ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அம்பாறை, கல்முனை போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
இச் சமுத்திரம் திறக்கப்பட்டதனால் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும் வெள்ள அனர்த்தத்திற்குள்ளானதாக பதிவாளர் எச்.ஏ.சத்தார் தெரிவித்தார். இங்கு பிரதான மின்மாற்றி வெள்ளத்தினால் அள்ளுண்டதுடன், விரிவுரையாளர் விடுதிகளும் பெரும் கிடங்குகளாகத் தோண்டப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால் இப்பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளன. காலநிலை சீராகும் வரை வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாடசாலைகள் அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்பே மீளத்திறக்கப்படுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று அதிகமான பாடசாலைகள் மாணவர்களது வரவின்மையினாலும் நீரில் மூழ்கியுள்ளதனாலும் நேரத்துடன் மூடப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் படகொன்றில்மீன்பிடிக்கச் சென்ற இருவர் படகு கவிழ்ந்ததனால் வெள்ளத்தில் அள்ளிச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டங்களில் பிரதான தொழில்துறைகளான விவசாயம், மீன்பிடிகளும் சகல வாழ்வாதார முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன், அதிக விலை உயர்வும் காணப்படுகின்றது. கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் விவசாயச் செய்கைகள் யாவும் மாறி மாறி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அழிவடைந்துள்ளன. சுமார் 2 மாதங்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததனால் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் மற்றும் பண்ணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் இம்மாவட்டங்களில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ள நீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பெறுமதியான வீட்டு உபகரணங்களும் தளபாடங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் பெருதல், மலசலகூடத் தேவை என்பவைகளை நிறைவேற்றுவதில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளையும் இம் மக்கள் எதிர்நோக்கி வருவதுடன், கடும் குளிரான காலநிலை தொடர்வதால் சிறுவர்களும் வயோதிபர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இச்சீரற்ற காலநிலை இடைக்கிடை நிலவுவதுடன், இது மே மாதம் வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 217.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தேங்கிநிற்கும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளது

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கான அனைத்துப்பிரதேசங்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது

கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் அடைமழை சில நாட்கள் ஓய்திருந்திருந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு சில நாட்களில் மீண்டும் கனமழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்துப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நீரின் அளவு மட்டம் உயர்ந்துவரும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக படுவான்கரைப்பகுதியின் அனைத்துப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கு செல்லும் அனைத்துப்பாதைகளும் வெள்ள நீர் நிரம்பியதால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.அப்பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் அவர்களுக்கான உணவுப்பொருட்களை இயந்திரப்படகுகள் மூலம் கொண்டுசெல்லும் பணிகளை படையினருடன் இணைந்து பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

படுவான்கரைக்குச்செலும் மண்டூர் –வெள்ளாவெளி வீதிபட்டிருப்புவீதி வவுனதீவுப்பாலம் போன்றனவற்றால் வெள்ள நீர் ஆறு அடிக்கும் மேல் பாய்ந்துசெல்கின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு –கொழும்பு பாதையில் பிள்ளையாரடி மற்றும் ஊறணி போன்றவற்றின் வீதிகளிலும் தன்னாமுனை வந்தாறுமூலைசந்திவெளி கிராண் போன்ற பிரதேசங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு கல்முனை காரைதீவு வீரமுனை மல்வத்தை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று தம்பிலுவில் திருக்கோவில் போன்ற பகுதிகளிலும் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்றுவேளையும் சமைத்த உணவு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகளை அழைத்து தற்போதை நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள நிலைமையினை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள நிலைமையினை எதிர்கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் சமைத்த உணவு மற்றும் குழந்தைகளுக்குரிய பொருட்கள்துபாய்கள்போர்வைகள்குடி நீர்கள் என்பனவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்தார்

பல்லாயிரக்கணக்கான மக்கள் மழையிலும் குளிரிலும் நலன்புரி நிலையங்களில


நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை: 56
நலன்புரி நிலையங்களிலுள்ள குடும்பங்கள்: 5,074 (17,503 நபர்கள்)
உறவினர்நண்பர் வீடுகளிலுள்ள குடும்பங்கள்: 7,077 (30,222 நபர்கள்)
மொத்தம்: 12,151 குடும்பங்கள் – 47,725 நபர்கள்
மழை வீழ்ச்சி: 01.01.2011 முதல் 03.02.2011 காலை 8:30 வரை: 1600.9 mm
(ஆண்டுச் சராசரி மழை வீழ்ச்சி: 1800 mm)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் இரண்டாவது தடவையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி மாத முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் முற்றாக வடிவதற்கு முன்னர் மீண்டும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்வு ஸ்தம்பித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மழையிலும் குளிரிலும் நலன்புரி நிலையங்களிலும் காலத்தை கழிக்க வேண்டிய அவல நிலைக்கு உட்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணித்தியாலத்துள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 253.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு காலநிலை அவதான நிலைய உத்தியோகத்தர் .எம்.எம். சாலிதீன் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் நேற்று காலை 8.30 மணிவரை 1600.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1651 மில்லி மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது. மழை தொடர்ந்து பெய்த வண்ணமுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் கரைக்கு மேலால் வெள்ளம் பாய்கிறது. வாவி கரையிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முறுத்தானை ஆறு அண்டல் ஓயா சில்லிக்கொடி ஆறு, மூங்கில் ஆறு, கிறட்டினை ஆறு, நாதனை ஆறு, வாழைச்சேனை ஆறு, பனிச்சங்கேணி ஆறு என்பன கரைபுரண்டு ஓடுகின்றன. கிறட்டினை ஆற்று கறுத்தப்பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவை நேற்று காலை நடைபெறவில்லை. மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் மன்னம்பிட்டியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கான வாகனப் போக்குவரத்து நடைபெறவில்லை. மட்டு திருமலை வீதியில் பிள்ளையாரடியிலும் வெள்ளம் பாய்கிறது.
காரைதீவு - அம்பாறை வீதியிலும் மாவடிப்பள்ளி, வளத்தாப்பிட்டி ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மண்டூர் - வெல்லாவெளி வீதி, பட்டிருப்பு - வெல்லாவெளி வீதி, வெல்லாவெளி - பாலையடிவட்டை விதி, வலையறவு - வவுனதீவு வீதி, வவுனதீவு - மண்டபத்தடி வீதி, வவுனதீவு - குறிஞ்சாமுனை வீதி ஆகியனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இவ்வீதிகளினூடாக வானகப் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்துள்ளன.
மண்முனை துறை இயந்திரப் படகுச் சேவையும் நேற்று நடைபெறவில்லை. மட்டக்களப்பு வாவியில் மண்டூர், அம்பலாந்துறை ஆகிய இரண்டு ஓடத்துறைகளினூடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. மண்டூர் ஓடத்துறை படகின் அடியில் ஓட்டை ஏற்பட்டுள்ளதினால் படகு பயணிகளுடன் வாவியில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளருடன் தொடர்பு கொண்டு மாற்று படகு வசதியை ஏற்படுத்துமாறு கேட்டுள்ளார்.
17 வருடங்களின் பின்னர் சேனநாயக்க சமுத்திரத்தின் 6 கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 110 அடி உயரமுடைய இக்குளத்தில் நீர் நிரம்பி வழிவதன் காரணமாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அத்துடன், உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், வாகனேரி ஆகிய பாரிய நீர்ப்பாசன குளங்களும் நிரம்பி வழிவதால் அவற்றின் கதவுகளும் தொடர்ந்து திறந்து விடப்பட்டு பூரண கட்டுப்பாட்டினுள் வைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ் மோகனராஜா தெரிவித்தார்.
மழை வெள்ளம் காரணமாக கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரி மற்றும் வந்தாறுமூலை வளாகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இசை நடனக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் கலாநிதி கே. பிரேமகுமார் தெரிவித்தார்.
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாதனவெளி வேத்துச் சேனை, ஆனை கட்டியவளி, ராணமடு போன்ற கிராமங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பண்டாரியா வெளி, படையான்டவெளி கிராமத்து மக்களும் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 7 நாட்களுக்கு போதுமான உலர் உணவு வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிப்புரை மட்டக்களப்பு அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் ஏற்கனவே 4 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப் பட்டன. இதனை வழங்காதவர்களுக்கே தற்போது 7 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப்படவுள்ளது.கூ
கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெள்ள நிலையினை கவனத்திற் கொண்டு 3 மாவட்டங்களுக்கு விஷேட வைத்திய குழுக்கள் மூன்றினை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சார் எம்.எஸ்.சுபைர் தெரிவிக்கின்றார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தால் தொற்று நோய்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உடனடி நடவடிக்கையெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுபைர் தெரிவித்தார்
கர்ப்பிணித் தாய்மார்களின் நலனில் அதிக கவனம் செலுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ள அமைச்சர், அவர்களுக்கான தேவைகளை எவ்வித தடைகளுமின்றி பெற்றுக் கொடுக்க நடவடிக்கையயெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அருகில் அம்பியுலன்ஸ் வண்டிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அமைச்சர் சுபைர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பதாக தெரிவித்த மாகாண அமைச்சர் சுபைர், வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் மக்களுக்கான உயர்ந்த பணியினை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 
thanks munai news

மீண்டும் வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு



மழை..
வெள்ளம்..
காற்று.. வான் கதவுகள் திறப்பு
இந்த சொற்களால் மனம் எவ்வளவு அவதிப்படுகிறது என்பதை அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். கடந்த மாதம் அதிகளவு மழைவீழ்ச்சியும் குளிர் காலநிலையும் என்றும் பின்னர் வெள்ளம் வழிந்தோடும் நிலையும் இருந்தது. அப்பொழுது அடைந்த வரலாறு காணாத வேதனைகளும் கண்ணீரைத்துடைக்க ஓடி வந்து உதவிய கரங்களும் கண்முன்னே நிக்கும். அவ்வெள்ளமே அனர்த்தம் என்று இருந்த எமக்கு இன்னும் இருக்குது என்பதை சொல்லும்பொழுதாக இப்பொழுதும் மீண்டும் அடைமழை, அதே வெள்ளம், இல்லை அதனை மீறிய வெள்ளம். மீண்டும் இடம்பெயரும் மக்கள். ஒரு குறிப்பிட்ட மழையையே தாங்கிப்பழகிய மக்கள் இந்த அதீத வெள்ளத்தின் காரணமாக அதிக இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர்.

நீரேந்து குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பால் அவற்றின் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட மீண்டும் கிராமங்களின் நீர்மட்டம் அதிகரிக்க மக்களின் வீடுகளில் வாழமுடியா நிலைதோற்றுவிக்கப்பட்டதால் மக்கள் உயர்ந்த கட்டடங்களில் அனேகமாக பாடசாலைகளில் இடம்பெயருகின்றனர்.மெதுவான சாரல் தூறல் மழையும் தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதானால் மழைவீழ்ச்சியினளவு அதிகரித்த வேளையிலும் குளங்களிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் கனவளவு அதிகரிப்பதால் தொடர்ந்து இயல்புவாழ்க்கையில் நிலைகுலைவு ஏற்பட்டவண்ணமிருக்கின்றன. மக்களின் தொகைகளுக்கு ஏற்றளவு போதிய இடவசதி காணப்படவில்லை பாடசாலைகளில். இது மற்றொரு பிரச்சனையாகக் காணப்படுகிறது.
மட்டகளப்பு மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிக்கபட்டுள்ளது. ஆயினும் முன்னைய மழைவெள்ள அனர்த்தத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களால் ஓரளவு இயைபாக்கமடைந்த தன்மையினால் வாழமுடிந்தாலும் மட்டகளப்பு செங்கலடி வந்தாறுமூலை முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து மக்கள் கஸ்டப்படும் தன்மையை நண்பர்கள்(*அமல் மற்றும் ஹரி) தங்களது முகப்புத்தகத்தில் (Facebook)பகிர்ந்துள்ளனர்

இங்குபோய்க் காண்க

இங்கும் போய்க்காண்க









நமது மக்கள் கஸ்டப்படும்போது இயன்றளவு உதவிகள் நல்குதல்வேண்டுமல்லவா. முடிந்தளவு யாருக்காவது எப்படியாவது உதவுங்கள் நண்பர்களே.
இது வேண்டுகொள் என்பதை விட மனதநேயத்தின் கடமையல்லவா.

முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் அளவைவிட இப்பொழுது மக்கள் அதிகளவு பாதிப்புள்ளாக்கபட்டுள்ளனர். மட்டக்களப்பில் எழுவான் கரைக்கும் படுவான்கரைக்கும் இடையிலான தரைவழிப்பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீண்டும் படுவான்கரை மக்களின் தொடர்பாடல் மிகக்கஸ்டமாக இருக்கும்.

இப்பொழுது சுதந்திரதினக் கொண்டாட்டங்களால் இவ்வெள்ள அனர்த்தம் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னரும் அரசு உரியமுறையில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்கமுடியாது. வெறும் ஊடகங்களுக்கு படம்காட்டுவதற்காக மட்டும் இவர்கள் நிவாரணம் வழங்குகிறார்களாக மக்கள் கருதுவதில் தவறில்லை என்பது உள்ளாந்த எண்ணம்.

ஆனாலும் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கெல்லாம் இருந்து பல உதவும் கரங்கள் உதவியதை மறக்கமுடியாது.அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் அனவரினதும் ஆசிர்வாதங்கள் நிச்சயம் கிடைக்கும்.

உண்மையில் மக்களின் பொருளாதாரம் அதாவது வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொருளாதார ரீதாக கஸ்டப்படுகிறார்கள். மக்கள் அனேகமாக நடுத்தர மற்றும் மிகக்குறைந்த வருமாத்தைக்கொண்ட குடும்பத்தவர்களாக இருப்பதால் இவர்களின் வாழ்க்கையில் இந்த வெள்ள அனர்த்தம் பெரும் பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை. நாளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்கள், விறகுவிற்று வாழும் மக்கள், செங்கல் உற்பத்தி செய்யும் மக்கள், என்று நாளாந்த வருமானமீட்டி வாழ்க்கையைக் கொண்டு செல்லுகின்ற மக்களின் மனநிலையை பொருளாதார ரீதியாக பின்னடைவுக்குதள்ளும் நிலை காணப்படுகிறது.
ஆயினும் தற்பொழுது உணவுக்கும் இருப்பதற்கும் போதுமான நிலைகாணப்பட்டாலே போதும். இதனால் எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ அங்கெல்லாம் பூக்கட்டும் உணர்வின் உதவிக் கரங்கள்
tanks rames sitaralkal