Kizakku vellam கிழக்கு வெள்ளம்
கிழக்கு மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள மக்களுக்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள உறவுகளே உதவுங்கள்.
Sunday, 6 February 2011
பாதிக்கப்பட்டோர் தொகை 13 இலட்சம்; 11,000 வீடுகள் சேதம்; 700 முகாம்கள்
4 மாவட்டங்களில் அபாயம்; 24 மணிநேர முன்னெச்சரிக்கை
திருமலை மாவட்டம்: முள்ளிப்பொத்தானை, இறக்கக்கண்டியில் 3 சடலங்கள் மீட்பு
நிலம் அமிழ்வதால் இரத்தோட்டையில் பரபரப்பு
பாதிக்கப்பட்டோர் தொகை 13 இலட்சம்; 11,000 வீடுகள் சேதம்; 700 முகாம்கள்
கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம்
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9664 வீடுகள் பகுதியளவில் சேதமடைந் திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாண கூறினார்.
இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாகவே தற்போதைய மழைக் காலநிலை தொடருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய மழைகால நிலையின் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. மீனவர்கள் முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று முன்தினம் முதல் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கிய போதிலும் இலங்கைக்கு அருகில் திரும்பவும் அமுக்க நிலை உருவாகி இருப்பதால் மழைக் காலநிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் குறிப்பிடுகையில், தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 முகாம்களில் தங்கியுள்ளனர்.
ம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6558 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6247 குடும்பங் களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6513 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடமத்திய கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.
இம் மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்வும் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி
Saturday, 5 February 2011
தாண்டு கொண்டிருக்கும் கிழக்கிலங்கை..
05 February 2011
ஆட வைத்திருக்கும் ஓடும் வெள்ளத்தில் பாடுமீன் வாவி பரவி பரிதவிக்கும் மக்கள் லெட்சோப லெட்சம். இரண்டாம் தடவையும் பெய்து வரும் அடைமழையில் மாவட்டச் செயலாளர் அறிக்கைப்படி 58,000 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 177 நலன்புரி முகாங்களில் 21,000 குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. குறிப்பாக கோடைமேடு, சித்தாண்டி, செங்கலடி, தன்னாமுனை, கல்லாறு, ஏறாவூர், வாகரை, பிள்ளையாரடி போன்ற எழுவான்கரைப்பிரதேசங்கள் மற்றும் படுவான்கரைப் பிரதேசத்தின் அனைத்துப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை கடற்ப்படையின் உதவியுடன் இவர்களுக்கான படகு சேவை நடைபெற்று வருவதுடன், பொதுமக்களின் தோணிகள் மூலமான சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றது.
(தடைப்பட்ட பாதையில் உழவு இயந்திரத்தில் வரும் மக்கள்)
இவைதவிர நான் சித்தாண்டி பக்கம் 03.02.2011 அன்று செய்தி சேகரிக்க சென்றபோது இந்தப்பக்கம் பிரயாணம் செய்ய முடியாமல் கிழக்குப் பல்கலைக்கழகத்தினில் இருந்து நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. அங்கு அநேகமான மக்கள் நடையிலும், உழவு இயந்நிரங்களிலும், வகை தொகையில்லாமல் வந்திறங்கினர். அவர்களில் குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என பலர் மிகவும் சிரமப்பட்டு வருவதை காணும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இவர்கள் அநேகமாக தீவுப் பகுதி, வந்தாறுமூலை வடக்கு, மற்றும் மேற்கு அதேபோல் கொம்மாதுறை மேற்கு மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து வருகை தந்தனர். 03.02.2011 அன்று இரவு வரைக்குமான கணக்கெடுப்பின்படி சுமார் 211 குடும்பம் தற்க்காலிகமாக தஞ்சம் புகுந்திருந்தனர். அநேகமான மக்கள் நாளாந்தம் கூலிவேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களாகவே இருந்தனர். இவர்கள் குறித்த நேரம் வரைக்கும் அநாதரவாகவே விடப்பட்டிருந்தனர்.
(மூழ்கிகொண்டிருக்கும் கிழக்குப் பல்கலைக்களகம்)
இருப்பினும் கி.ப.கழகத்தின் சமுகவியல் துறையில் மூத்த விரிவுரையாளரும், சமூக சேவகருமான தில்லைநாதன் அவர்களின் பரோபகார சிந்தையில் இந்த பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உடனடி உணவு உறைவிட வசதிகள் அங்கு கடமைபுரியும் சக ஊழியர்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டமையை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்துடன் இன்னும் உதவக்கூடிய பெரியவர்களிடமும் உதவிகள் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களும் சிறியளவில் கொடுத்து உதவியதுடன். பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்களும் அம்மக்களின் அவல நிலையை பார்த்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கி.ப.கழகத்துள் நுழையும் இடம் பெயுர்ந்த மக்கள்)
இம்மக்கள் போன்று மாவட்டம் பூராகவும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிலமையும் மிக மோசமாகவே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. சுமார் நான்கு அடி அளவில் வெள்ளம் வேகமாக பரவி ஓடுவதனை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அநேகமான சொத்துக்கள் சிதைவடைந்துள்ளது. குறிப்பாக அவர்களது விவசாயப்பண்ணைகள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி இருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. அது போன்று இன்னும் நிறைய இழப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கிடையில் இங்கு மாணவர்கள் அனைவரும் வீடு சென்றுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கற்பித்தல் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
(ஓடும் வெள்ளத்தில் ஆடும் கலை கலாசார பீடம்)
ஆகவே திரும்ப திரும்ப அடிக்கும் வெள்ளம் மக்களை அடியோடு குன்றவைத்துள்ளது. அவர்களது வாழ்வாதாரம், வாழ்விடம், கல்வி, வீடுகள் என அனைத்தையும் அழித்துள்ளது. சுனாமி அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இது பன்மடங்கு அழிவினை மக்களுக்கு ஏற்ப்படுத்தியுள்ளதுthanks vellisaram
மட்டு.மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் படுவான்கரையுடன் தொடர்பு முற்றாகத் துண்டிப்பு குளங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன
Saturday, 05 February 2011 09:51
வெளிமாவட்டங்களுக்கான பிரதான போக்குவரத்து மற்றும் உள்ளூர் போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
படுவான்கரையிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதியுடனான தொடர்புகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலத்தில் மாவட்டத்தில் 84.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றுக் காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலத்தில் 272.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கடந்த முதலாம் திகதியிலிருந்து நேற்றுக் காலை 8.30 மணிவரை 1685.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 33,149 குடும்பத்தைச் சேர்ந்த 1 இலட்சத்து 24 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 13,148 குடும்பங்களைச் சேர்ந்த 47,057 பேர் 105 நலன்புரி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன், 20,001 குடும்பங்களைச் சேர்ந்த 76,931 பேர் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களுக்கு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் உத்தரவின் பேரில் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை வரையான தகவலின்படியே மேற்படி இடம்பெயர்வு பதிவாகியுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வேகமாக நீர்பெருக்கெடுத்ததால் உயர்வான பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகர் உட்பட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல கிராமங்களில் இருந்து மக்கள் இயந்திரப் படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். மீட்கப்பட்ட மக்கள் பாடசாலைகளிலும் பொது கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்கள், கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இயந்திரப் படகு மூலம் மீட்புப் பணிகளை நேற்று முன்தினம் மாலைவரை மேற்கொண்டனர். சமைத்த உணவினை வழங்குவதற்கான பணியும் படகுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் மாலை வரை நீர்பெருகிய வேகத்தில் தொடர்ந்து நீர் பரவுமாக இருந்தால் சில பகுதிகள் தவிர அனைத்துப் பகுதியும் நீரில் மூழ்கும் அபாயமும் மக்களைப் பாதுகாப்பதில் சிரமமும் ஏற்படும்.
வெள்ளம் காரணமாக மட்டக்களப்புகொழும்பு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புகையிரதச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
படுவான்கரைக்கான போக்குவரத்துப் பாதைகளை வலையிறவு பாலவீதி, பட்டிருப்பு பாலவீதி, புலிபாய்ந்தகல்பால வீதி, செங்கலடி கறுத்தப்பால வீதி என்பன நீரில் மூழ்கியதுடன், கிராமங்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலைகள் இயங்கவில்லை.
வாகரைப் பிரதேசத்தில் பனிச்சங்கேணி பாலம், கட்டுமுறிவு, வெருகல் போன்ற கிராமங்களுடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்த சில நெல் வயல்கள் தற்போது அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த போதும் அவை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், அறுவடை செய்த நிலையில் உள்ள உப்பட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
குளங்கள் உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் குளங்கள் உடைப்பெடுக்கக் கூடிய சாத்தியம் இல்லை என அந்தந்த குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளதுடன், உடைப்பெடுக்காமல் பாதுகாக்கவே மேலதிக நீரை திறந்துவிட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்ட போதும் படுவன்ங்கரையில் உள்ள வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, செங்கலடி, கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளே மிகவும் மோசமாக நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள அகதிகளை மீ“ட்கச் சென்ற படகு மூழ்கி இரு குழந்தைகள் உட்பட ஐவரை காணவில்லை திருமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிப்பு
Saturday, 05 February 2011 09:55
சேருவிலவின் சிற்றாறு என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தோரை மீட்பதற்குச் சென்ற படகு மூழ்கியதிலேயே இரு குழந்தைகள்,பெண் ஒருவர், கடற்படை வீரர் உள்ளிட்ட ஐவர் காணாமல் போயுள்ளனர்.
உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 3 இராணுவத்தினர், 4 கடற்படையினர் ஆகியோர் அப்படகில் சென்று 16 பேரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின்போதே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கடற்படையினர் ஏனையோரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலைகண்டி வீதியில் தம்பலகமம் அருகில் கல்மெட்டியாவ குளம் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய வங்கி சிற்×ழியர் ஒருவர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோகா பியதாஸ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 60 ஆயிரம் பேர் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 159 நலன்புரி நிலையங்களில் 15669 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 198 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் மாவட்டம் முழுவதுமாக 80 ஆயிரத்து 952 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ. நடராசா தெரிவித்தார்.
நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மூன்று நாள் சமைத்த உணவும் ஒருவார கால உலர் உணவு நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் ஒருவார கால உலர் உணவு நிவாரணம் வழங்கப்படுவதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அமைச்சு பிறப்பித்திருப்பதாகவும் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மகா விளாங்குளத்தின் அணைக்கட்டு வெட்டப்பட்டு மேலதிக நீர்வெளியேறவிடப்பட்டது.
அதனையடுத்து அப்பிரதேசம் வெள்ளக்காடாகியது. குளம் உடைத்துவிடும் என்ற அச்சத்தினாலேயே அணைக்கட்டின் ஒரு பகுதி வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது
Friday, 4 February 2011
துண்டிக்கப்பட்ட வெல்லாவளி
துண்டிக்கப்பட்ட வெல்லாவளி
இப்பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு பெற்ற தகவல்களின் அடிப்படையில் 04-02-2011 பிற்பகல் 6 மணிவரை இதுவரை 1128 குடும்பங்களைச் சேர்ந்த 4275 மக்கள் இடம்பெயர்ந்து 18 நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 1592 சிறுவர்களும் அடங்குவதாகவும் குறிப்பிட்டார். வேத்துச்சேனை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, மலைக்கட்டு, இராணமடு, முனைத்தீவு,பழுகாமம், பட்டாபுரம் போன்ற அனேக கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
இதனால் கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அவர்களுக்கு உலர்உணவுகள் மற்றும் படுக்கைவிரிப்புகள்(பாய்), உடுதுணிகள் போன்றன அவசரமாகத் தேவைப்படுகின்றன.
முடிந்தளவு உதவி நல்குபவர்கள் உதவிக்கொள்க. உறவுகளே அனர்த்தத்தின் தாக்கங்கள் அறிவீர்கள். முடிந்தளவு உதவுங்கள்.
இங்கு சென்று பட்டிருப்பு பாலத்தின் நிலமையைக்காட்டும் படங்கள் பார்க்க நன்றி ஹரி
கடந்த மாதம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு.
பட்டிருப்பு பாலத்தின் போக்குவரத்து நிலைமை - 13.01.2011
இதனைவிட இப்பொழுது மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளத
thanks rames
கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு
கல்முனை கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் இருவரைக் காணவில்லை என சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சேனைக்குடியிருப்பிலிருந்து சவளக்கடை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தோணி பலத்த காற்றின் காரணமாக கிட்டங்கி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. அதில் பயணித்த 06 பேரில் நால்வர் (04) தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், ஏனைய இருவரைக் காணவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாவிதன்வெளி மற்றும் அன்னமலைக் கிராமங்களைச் சேர்ந்த சதீஸ், கணேஸ் ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.
கல்முனை நகரையும், நாவிதன்வெளி குடியேற்ற கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக 5 அடிக்கு மேலாக வெள்ளம் கடந்த சில நாட்களாக பாய்ந்து வருவதால் வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப் பட்டுள்ளதையடுத்து, வியாழக்கிழமை தொடக்கம் தோணியினூடாகவே மக்கள் பயணத்தை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச்சம்பவத்தை யடுத்து நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸாருக்கு இவ்வீதியூடாக சகல மார்க்க போக்குவரத்தையும் தடை செய்யுமாறு அறிவித்ததையடுத்து, கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்து வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)